0
ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர்
வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.

நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது. எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை. எனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.

இப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். அவற்றைப் பார்க்கலாம்.

போலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்: திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடனடியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்லது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தரப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடும். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள்ளுங்கள். விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங்கள் சம்மதிக்கும் நிலையில், உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ளதாகவும், வைரஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட்டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திருடப்படும். சில நாட்கள் இடைவெளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்தமாகத் திருடப்பட்டிருக்கும்.

இவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடவும். அவற்றின் வழியாகத்தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்கவும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந்தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பின்னர், வழக்கம் போல கம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறியப்படும். அவற்றை நாம் அழித்துவிடலாம்.

தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்: நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம் “இது எப்படி வந்தது?” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல் பார்கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எனில், தொடர்ந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். இல்லை எனில், அதனை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல்லது. ஏனென்றால், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.

இணையத்தில் மாற்று வழி செல்லத் தூண்டுதல்: பல வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற்கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி இந்த டூல் பார்களை நீக்கவும்.

பாப் அப் செய்திகள்: சில இணைய தளங்களைப் பார்வையிடுகையில், திடீர் திடீரென ஏதேனும் பாப் அப் செய்திக் கட்டங்கள் காட்டப்பட்டு, அதில் தரப்படும் தகவல்கள், நம்மை சில லிங்க்குகளில் கிளிக் செய்திடக் கேட்டுக் கொள்ளும். சர்வே எடுப்பதாக்க் கூறிக் கொண்டு, நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்களை கேட்டு வாங்கும். சர்வேயில் கலந்து கொண்டால், ஆப்பிள் ஐபோன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நமக்கு ஆசை காட்டும். இது போன்ற செய்திகளை உருவாக்கித் தருவதும் சில டூல்பார்களே. எனவே, மேலே காட்டியுள்ளபடி, இந்த புதிய டூல்பார்களை நீக்குவதே, இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.

நண்பர்களுக்கு உங்கள் பெயரில் அஞ்சல்: உங்கள் மின் அஞ்சல் முகவரியிலிருந்து, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அஞ்சல் செல்லும். அதில் நீங்கள் வெளிநாடுவந்திருப்பதாகவும், பணம் முழுவதையும் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி இருக்கும். அந்த நாட்டு வங்கிக் கணக்கு ஒன்று தரப்பட்டு, அதில் பணம் செலுத்தி உதவும்படி தகவல் தரப்படும். இப்படிப்பட்ட அஞ்சல்கள் அனுப்பப்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு, வைரஸ் வசம் சென்றுவிட்ட்து என்று உறுதியாகக் கூறலாம். சில வேளைகளில், இத்தகைய அஞ்சல்களில், அனுப்பியவரின் பெயராக உங்கள் பெயர் இருக்கும். ஆனால், அனுப்பிய அஞ்சல் முகவரி உங்களுடையதாக இருக்காது. அதனைப் பார்த்து நாம் இது போலி என அறிந்து கொள்ளலாம். அவ்வகையில், அஞ்சல் முகவரி வேறாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படவில்லை; ஆனால், அஞ்சல் முகவரிகள் திருடப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் நிச்சயம் அஞ்சல் வழியாகவோ, அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு, இது குறித்துக் கூறுவார்கள். உடனே விழித்துக் கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடவும். தேவையற்ற இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை அழிக்கவும். டூல்பார்களையும் நீக்கவும்.

இணைய பாஸ்வேர்ட் மாற்றம்: இணைய இணைப்பிற்கு மற்றும் சில இணைய தளங்களுக்கு நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம்மால், இந்த சேவை எதனையும் பயன்படுத்த முடியாது. இது எப்போது நடக்கும்? இதற்குக் காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு அஞ்சல் ஒன்று வந்திருக்கும். அதில், அனைத்து சந்தாதாரர்களின் பதிவுகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுவதாகவும், அதற்காக உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தரவும் என்று கேட்கப்படும். அதனை உண்மை என நம்பி, நீங்களும் தந்திடுவீர்கள். இவற்றைப் பெற்ற அந்த தீயவர்கள், உங்கள் இணைய சேவை மற்றும் தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை முற்றிலுமாக மாற்றி, உங்களை அலைக்கழிப்பார்கள். அல்லது குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி கேட்டுக் கொள்வார்கள். நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணத்தை எடுத்துக் கொண்டு, வங்கிக் கணக்கைத் தொடராமல் விட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும், உங்கள் இணைய சேவை பாதிக்கப்பட்டிருப்பதனை அறிவிக்கவும். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் யூசர் அக்கவுண்ட்டிலிருந்து போலியான தகவல்கள் அனுப்பப்படலாம். அடுத்து, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திடம், உங்கள் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருப்பதனை அறிவித்து, அதனை முடக்கி, பின் மீண்டும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைப் புதியதாக அமைக்கும் வசதியைக் கேட்டுப் பெறவும். பெரும்பாலான இணைய சேவை நிறுவனங்கள் இது போன்ற அவசர உதவியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நமக்கு உதவும்.

பொதுவாக, இணைய தளங்கள் இது போன்ற தகவல்களைக் கேட்டுப் பெறுவதில்லை. எனவே, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், அந்த தளத்தினை, அஞ்சலில் தரப்பட்ட லிங்க் வழி அணுகாமல், நேரடியாக இணையம் வழி அணுகி, அப்படிப்பட்ட தகவல் தரப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மவுஸ் பாய்ண்ட்டர் தானாகச் செயல்படுதல்: சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், உங்கள் மவுஸ் பாய்ண்ட்டர் தானாக நகர்ந்து சென்று, சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், நீங்கள் வைரஸ் புரோகிராமினால் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உறுதியாகிறது. பொதுவாக ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட்டால், மவுஸ் தாறுமாறாகச் செயல்படும். ஆனால், இவ்வாறு ஆப்ஷன் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், அது நிச்சயம் வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். இவை பெரும்பாலும், சில புரோகிராம்களையே இன்ஸ்டால் செய்திடும். நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் விட்டு வைத்திருக்கையில், அதனை இயக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்தால், கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்கவும்.

பின்னர், ரெஸ்டோர் வழியில் சென்று, கம்ப்யூட்டரைச் சரிப்படுத்தவும். அதற்கு முன்பாக, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், உங்கள் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றவும். நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்தி, சைபர் கிரைம் பிரிவு வழியாகத் தீர்வு காணவும். வங்கிக் கணக்கின் இணைய சேவையினை நிறுத்தி வைக்குமாறு, வங்கிக்கு கடிதம் தரவும்.

எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு: கம்ப்யூட்டரில் நாம் எதிர்பாராத நிலையில் புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறதா? நிச்சயமாக, அது வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். அல்லது, நீங்கள் பதிந்த புரோகிராம் நிறுவனமே, இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராமினை பதிந்து வைக்கும். நீங்கள் பயன்படுத்திய முதல் புரோகிராமினைப் பதிகையில் தரப்படும் நிபந்தனைகளில், இது போன்ற தேவைப்படும் புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் பதிவதற்கான அனுமதியை, நீங்கள் அறியாமலேயே பெற்றிருக்கும்.

செயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்: நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர் ஆகியவற்றை நாம் அணுக முடியாமல் உள்ளதா? அல்லது அவை செயல் இழந்து உள்ளனவா? நிச்சயமாக, கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டினை விட்டுப் போய்விட்டது. உடனடியாக, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, மேலே தரப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும். பின்னர், ரெஸ்டோர் வழியாகக் கம்ப்யூட்டரை முந்தைய நாள் ஒன்றுக்குக் கொண்டு செல்லவும். இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கில் பணம் குறைகிறது: நிச்சயமாய் நம் இணைய வழி வங்கி சேவையினைப் பயன்படுத்தி, ஹேக்கர் செய்திடும் வேலை தான் இது. பெரும்பாலும், நம் அக்கவுண்ட்டில் உள்ள அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டு வங்கி மூலம், அந்நாட்டுக் கரன்சிக்கு மாற்றி உங்கள் பணம் எடுக்கப்பட்டிருக்கும்.

உடனடியாக, வங்கி, காவல் துறைக்கு இதனைத் தெரியப்படுத்தி, உடனடி நடவடிக்கைக்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில வங்கிகள், இது போன்ற நிகழ்வுகளில், நமக்கு இழப்பீடு தரும் வகையில் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டிருக்கும். இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கை தேவை.

இணையக் கடைகளிலிருந்து குற்றச் சாட்டு: சில வர்த்தக் இணைய தள நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில்லை; தவணைப் பணம் செலுத்தவில்லை என அஞ்சல் மற்றும் கடிதங்கள் வரும். நிச்சயமாய், உங்கள் கம்ப்யூட்டர் கைப்படுத்தப்பட்டு, அதன் மூலம், மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்பட்டு, அவை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாமல், வேறு ஒரு முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு செயலாக இருக்கும். முதலில், இணைய தள நிறுவனத்தில் நம்பிக்கையை உருவாக்கி, பின்னர், மொத்தமாக நம் அக்கவுண்ட்டில் பொருட்களை வாங்கி இருப்பார்கள். சில இணைய தளங்கள், தவணை முறையிலும் பொருட்களைத் தருவதால், இந்த ஏமாற்று வேலை, திருடர்களுக்கு எளிதாகிறது. இது தெரிந்தவுடன், உடனடியாக வங்கி இணைய சேவையின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை மாற்றவும். வங்கி, காவல்துறைக்கு தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்கச் சொல்லவும்.

மேலே சொல்லப்பட்ட திருட்டு நடவடிக்கைகள் மூன்று கட்டமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை, சரி செய்யப்படாத பிழைக் குறியீடுகள் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் புரோகிராமினை இயக்குதல் மற்றும் திருட்டு மின் அஞ்சல்களுக்கு உடன்பட்டு செயல்படுதல் ஆகும். இந்த மூன்று விஷயத்திலும் நாம் சற்றுக் கவனமாக இருந்தால், நம் கம்ப்யூட்டர் முடக்கப்படுவதனை, நம் பணம் திருடப்படுவதனைத் தடுக்கலாம். நமக்கு இதெல்லாம் நடக்காது என்று மெத்தனமாக இல்லாமல், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே, இத்தகைய நிலைகளைத் தடுக்கக் கூடிய வழிகளாகும்.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top